View vibrant Life in our Universe through Swamy's lens!

5 Jun 2017

நாலடியார் 400 ~ பாடல் 91 ~ ஸ்வர்கத்துக்குத் தத்கால்

நாலடியார் 400 ~ பாடல் 91 ~ ஸ்வர்கத்துக்குத் தத்கால்

இல்லா இடத்தும் இயைந்த அளவினால் 
உள்ள இடம்போல் பெரிதுவந்து - மெல்லக் 
கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு 
அடையாளம் ஆண்டைக் கதவு.

தன்னிடம் மிகுந்த அளவில் செல்வம் இல்லாவிட்டாலும், போதுமான அளவு செல்வம் இருந்த காலத்தைப் போல, உதவி வேண்டி வருபவர்களின் வருகையால் மகிழ்ந்து, சிறிய அளவிலாவது பிறருக்குக் கொடுத்துதவும் நற்பண்பை உடைய மனிதர்களுக்கு, ஸ்வர்க உலகத்தின் கதவுகள் ஒருபோதும் மூடப்படாது.

நமது செல்வமானது எப்போதும் பெருகிக்கொண்டே இருக்கும் என்று சொல்ல இயலாது. தவறான வழியில் மிகுந்த அளவில் பொருள் சேர்த்தவர்கள்கூட, Demonetization போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால், சேர்த்த பொருளை இழக்க நேரிடலாம். நேர்மையாகப் பொருளீட்டி, அதைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களின் செல்வமும் கூட, பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டால், மதிப்பில் குறைய வாய்ப்பிருக்கிறது. செல்வாக்கான பதவியில் நீண்டகாலமாக இருப்பவர்கள் கூட, திடீரென்று வேலையைவிட்டு நீக்கப்படலாம். பெருமழையால் வந்த வெள்ளம், நிலநடுக்கம், கடும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றத்தால், வீடு, நிலம் போன்றவற்றில் சேர்த்துவைத்த பொருளை இழக்க நேரிடலாம். முறையற்ற கட்டுமானக் குறைபாடுகளால், நெருப்புப் பிடித்து எரிந்தும் கட்டிடங்கள் அழியலாம். எனவே, சேர்த்த செல்வம் என்பது நிலையற்றது.

ஆனால், பொருளுதவியோ அல்லது வேறு ஏதோ ஒரு வகையான உதவியோ தேவைப்படுபவர்கள் எங்கும், எப்போதும் உள்ளனர். அவர்கள் நம்மிடம் வந்து உதவி கேட்கும்பொழுது, நமது தற்போதய நிலை முன்புபோலச் சிறப்பாக இல்லாவிட்டாலும், நம்மால் இயன்ற அளவு, ஏதாவது உதவியை நாம் செய்யவேண்டும். அவ்வாறு, தனது நிலையாக காரணம் கூறாது, சிறிய அளவிலாவது, தன்னலமற்றுப் பிறருக்கு உதவி புரிபவர்களுக்கு, ஸ்வர்கம் / சொர்க்கம் எனப்படும் மரணத்திற்குப் பிந்தைய மேலுலகில், தத்கால் முறையில் இடம் அளிக்கப்படும். அதாவது, சொர்கத்தின் கதவுகள் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் திறந்து விடப்படும்.

பி.கு.1 ஆன்மீக சாதகரான ஸ்வாமி, ஸ்வர்கம், நரகம் போன்ற தனிப்பட்ட வேற்று உலகங்கள் மீது நம்பிக்கைகளைக் கொண்டவரல்ல. ஆயினும், பெரும்பாலான மதம் சார்ந்த வழியில் செல்லக்கூடிய மக்கள் அவற்றை நம்புவதால், இல்லாதோருக்கு உதவும் ஈகைத் தன்மையின் பெருமையை எடுத்துக்காட்ட, தற்காலத்து தத்கால் முறையை ஒரு நகைச்சுவையான உதாரணமாகப் பயன்படுத்தியுள்ளார்.   

பி.கு.2 50க்கும் மேற்பட்ட ஏழைக்குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடர, பத்து வருடங்களாக உதவி வரும் மீனாக்ஷி வித்யாபீடத்திற்கு, உங்களால் இயன்ற பொருளாதார உதவியை நீங்களும் செய்து, இவ்வுலகிலேயே மேலான வாழ்வை அடையலாம்.

~ஸ்வாமி | @PrakashSwamy

No comments:

Post a Comment

Thank you for investing precious time to view Life in our vibrant Universe through Swamy's lens. Kindly reflect on what you've learned and leave a comment. Feel free to share this post with other enthusiasts. Be Joyful & spread the cheer!